Skip to content

நீட் தேர்வு அழுத்தம்; தந்தையை சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக வெட்டி பீப்பாயில் மறைத்த மகன்! லக்னோவில் நிகழ்ந்த பயங்கரம்

லக்னோ, பிப்.24; உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி அழுத்தம் ஒரு பயங்கரமான குற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த 19 வயது மகன், தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான்.

தந்தையைக் கொன்றுவிட்டு காணவில்லை என புகார் கூறிய மகன்

லக்னோவின் ஆஷியானா பகுதியைச் சேர்ந்தவர் மன்வேந்திர பிரதாப் சிங், இவர் ஒரு நோயறிதல் மையத்தின் (Pathology Center) உரிமையாளர். கடந்த 20ஆம் தேதி முதல் பிரதாப் சிங்கை காணவில்லை என அவரது மகன் அக்ஷத் பிரதாப் சிங் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் புகாரளித்த மகனே கொலையாளி என்பது தெரியவந்தது. வீட்டின் தரைத்தளத்தில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் (Drum) மன்வேந்திராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொலையின் பின்னணி: நீட் (NEET) தேர்வு அழுத்தம்

கைது செய்யப்பட்ட 19 வயது அக்ஷத், பி.காம் (B.Com) மாணவர் ஆவார். அவர் 12ஆம் வகுப்பில் உயிரியல் (Biology) பாடத்தை எடுத்திருந்ததால், அவரை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். இதற்காக நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு அக்ஷத்தை அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த 20ஆம் தேதியன்று, இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அக்ஷத், வீட்டில் இருந்த துப்பாக்கியால் தந்தையைச் சுட்டுக் கொன்றார்.

ஆதாரங்களை மறைக்க முயற்சி

கொலை செய்த பிறகு, உடலை மூன்றாவது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு எடுத்து வந்துள்ளார் அக்ஷத். அங்கு உடலைத் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை அருகில் உள்ள சதரோனா கிராமத்தில் வீசியுள்ளார். மீதமுள்ள உடல் பாகங்களை வீட்டின் தரைத்தளத்தில் இருந்த ஒரு பீப்பாய்க்குள் ஒளித்து வைத்துள்ளார்.

போலீஸ் விசாரணை; குற்றத்தை ஒப்புக்கொண்டு கதறி அழுத மகன்

தந்தை காணாமல் போனதாக அக்ஷத் நாடகமாடிய போதிலும், போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். பின்னர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட போது, தனது தந்தையைத் தானே கொன்றதை ஒப்புக்கொண்டு கதறி அழுதார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

மீண்டும் எமனாக மாறிய நீட் தேர்வு அரக்கன்

இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் மீது திணிக்கப்படும் அதீத கல்வி அழுத்தம் இத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவதும், அவர்களின் மன அழுத்தத்தைப் புரிந்துகொள்வதும் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *