வாஷிங்டன், டிச.26; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், நைஜீரியாவில்
உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் “போர் அமைச்சகம்” (Department of War) வியாழக்கிழமை (25.12.2025) அன்று வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காட்சிகளை வெளியிட்டது. போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், “எனது உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று உறுதிப்படுத்தினார்.
“கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி”
நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டுகளாக இல்லாத அளவிற்கு கிறிஸ்தவர்கள் அங்கு குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். தீவிரவாத கும்பலை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தனது பதிவில் “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்; கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கும் சேர்த்துதான்!” என்று அவர் பதிவிட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க தாக்குதல் குறித்து நைஜீரிய அரசின் விளக்கம்
இந்தத் தாக்குதலை நைஜீரிய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க நைஜீரிய அரசு செயல்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நைஜீரிய அரசு கூறியுள்ளது.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழலை மாற்றும் என நம்பிக்கை
அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு நைஜீரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள முதல் தாக்குதல் இதுவாகும். தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
