நொய்டா,ஜன.19; நொய்டாவில் அடர் மூடுபனி காரணமாக கார் கழிவுநீர் கால்வாயில் விழுந்ததில், 27 வயது மென்பொருள் பொறியாளர் தனது தந்தையின் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து
நொய்டா செக்டார் 150-ல் வசிக்கும் யுவராஜ் மேத்தா (27), குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, செக்டார் 150 அருகே அடர் மூடுபனி காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த 70 அடி ஆழமான கழிவுநீர் கால்வாயில் பாய்ந்தது.
“அப்பா என்னை காப்பாத்துங்க” – மகனின் கடைசி அழைப்பு
கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் எப்படியோ காரில் இருந்து வெளியேறி அதன் கூரை மீது ஏறி நின்றுகொண்டார். உடனடியாக தனது தந்தை ராஜ் மேத்தாவுக்கு போன் செய்து, “அப்பா, நான் பள்ளத்தில் விழுந்துவிட்டேன், என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார். பதறிப்போன தந்தை சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
2 மணி நேர போராட்டமும் அதிகாரிகளின் மெத்தனமும்
யுவராஜின் தந்தை மற்றும் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்த போதிலும், தகுந்த மீட்பு உபகரணங்கள் அல்லது நீச்சல் தெரிந்த வீரர்கள் இல்லாததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
யுவராஜ் சுமார் இரண்டு மணி நேரம் காரின் கூரை மீது நின்றபடி உதவிக்காகக் கூச்சலிட்டுள்ளார்.
அங்கு வந்த போலீசார், தங்களுக்கு நீச்சல் தெரியாது என்றும், தண்ணீர் மிகவும் குளிராக இருப்பதாகவும் கூறி தண்ணீரில் இறங்க மறுத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மீட்புக் குழுவினர் வருவதற்குள், சுமார் 2:30 மணியளவில் யுவராஜ் நீரில் மூழ்கினார்.
அதிகாரிகளின் அலட்சியமே காரணமா?
விபத்து நேரிட்ட பகுதியில் கால்வாயின் தடுப்புச் சுவர் சேதமடைந்திருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என உயிரிழந்தவ இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். இப்பகுதியில் முன்னரே பலமுறை தடுப்புச் சுவர் அமைக்கக் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தையின் கண் முன்னே மகன் நீரில் மூழ்கிய கொடூரம்
பாதுகாப்பு வசதிகள் இல்லாத சாலைகளும், மீட்புப் பணிகளில் ஏற்படும் தாமதமும் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ளது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்கு ஒரு குடும்பம் தனது ஒரே வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறது. இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க, கட்டுமானப் பகுதிகளில் முறையான எச்சரிக்கை பலகைகளும், தடுப்புகளும் அமைக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
