Skip to content

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேர்கின்றனர்; தேமுதிகவின் பெயரைக் குறிப்பிடாமல் நயினார் நாகேந்திரன் விமர்சனம்!


திருச்சி,பிப்.21; திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் தலைப்பாகும். இதனை ஆதரித்தும் வசைபாடியும் சமூகவலைதளங்களில் கருத்துகள் சூடாக பகிரப்பட்டு வருகின்றன.

திமுகவுக்கு எதிராக கட்சி கண்ட விஜயகாந்தின் தொண்டர்கள், பிரேமலதாவின் முடிவை ஏற்பார்களா? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

திமுக, அதிமுக என இரண்டு கூட்டணிகளுடனும் பேசிக் கொண்டிருந்த பிரேமலதா, எதனடிப்படையில் திமுக பக்கம் சாய்ந்தார் என்ற கேள்வி பொதுவெளியில் எழாமல் இல்லை.

மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை

இதுபோன்ற சூழலில், நெல்லையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் இன்று (21.02.2026) திருச்சி வந்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், அடுத்த மாதம் (மார்ச்) 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளதாகத் தெரிவித்தார்.

அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது; அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம்; இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பததொடர்பான இறுதி முடிவை அறிவிப்போம் என்று கூறினார்.


“200 இடங்களில் யார் வெற்றி பெறுவர்” என்பதை மக்கள் தீர்மானிப்பர்

200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுகின்றனர்; ஆனால், 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று நாகேந்திரன் தெரிவித்தார்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வளவு சதவீதம் நிறைவேற்றி உள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர்களே மாற்றி மாற்றிப் பேசி வருகின்றனர்; ஆனால் அவர்கள் 90% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

“மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறது திமுக”

கடந்த தேர்தலைப் போன்றே மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்க தொடங்கியுள்ளதாக நாகேந்திரன் விமர்சித்தார். இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நாகேந்திரன் தெரிவித்தார்.

தேமுதிக பெட்டி வாங்கிக்கொண்டு திமுகவில் சேர்ந்ததா?

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். அப்போது செய்தியாளர்கள், நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு,“நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன், திருச்சி பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர், மன்னார்புரம் ராணுவ மைதானம், மாத்தூர் ரிங் ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டார். இவற்றில் ஒரு இடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *