கைபர், ஜன.24; பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர் . 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நேற்று (23.01.2026) வெள்ளிக்கிழமை ஒரு திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. வாத்தியங்கள் முழங்க, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த வேளையில், திடீரென நுழைந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதல் அரசு ஆதரவு சமூகத் தலைவரான நூர் ஆலம் மெஹ்சுத் என்பவரது இல்லத்தில் நடைபெற்றது. தற்கொலைப் படைத் தாக்குதலால் அந்த இடமே ரத்தக் களறியாக மாறியது.
மீட்புப் பணிகள் மற்றும் உயிரிழப்புகள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். கொடூரச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தாக்குதலுக்கு பின்னணியில் யார்?
இந்த கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பின் மீது சந்தேகம் வலுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய இந்த அமைப்பு, அண்மைக் காலங்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசு ஆதரவு அமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மரண ஓலமாக மாறிய மணவிழா நிகழ்வு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண விழா, மரண ஓலங்களாக மாறியிருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
