Skip to content

பாகிஸ்தானுக்கு தடையா? ஐசிசி-க்கு பகிரங்க சவால் விடுத்த முன்னாள் வீரர்: கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு!

இஸ்லாமாபாத், பிப்.05; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இடையே தற்போது கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு முன்னாள் வீரர் பாசித் அலி ஐசிசி-க்கு “முடிந்தால் எங்களைத் தடை செய்து பாருங்கள்” என அதிரடி சவால் விடுத்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்; என்ன நடக்கிறது?

நாளை மறுதினம் (07.02.2026) தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா உடனான லீக் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவுக்குச் சென்று விளையாட மறுத்த விவகாரத்தில், அந்நாட்டுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விளையாட மறுப்பதால் பாகிஸ்தான் – ஐசிசி கடும் மோதல்

இந்த திடீர் புறக்கணிப்பு முடிவால் ஆத்திரமடைந்த ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

முடிந்தால் தடை செய்து பாருங்கள்; பாசித் அலி காட்டம்

இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய முன்னாள் வீரர் பாசித் அலி, ஐசிசி-யின் போக்கை கடுமையாக விமர்சித்தார்.

“1996 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் போட்டிகளைப் புறக்கணித்தன; 2003-ல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும் சில போட்டிகளைப் புறக்கணித்தன; அப்போது அந்த அணிகளுக்குப் புள்ளிகள் மட்டுமே குறைக்கப்பட்டன, எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை; இப்போது பாகிஸ்தான் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? தைரியம் இருந்தால் பாகிஸ்தானைத் தடை செய்து பாருங்கள் (Karke Dekh Lo)” என்று பாசித் அலி சவால் விடுத்துள்ளார்.

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததை சுட்டிக்காட்டி கேள்வி

மேலும், ஆசியக் கோப்பை தொடரின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததையும், கௌரவமான முறையில் கோப்பையைப் பெற மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா எதைச் செய்தாலும் அமைதியாக இருக்கும் ஐசிசி, பாகிஸ்தான் மீது மட்டும் பாயக் காத்திருப்பது ஏன் என்றும் பாசித் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள்?

பாகிஸ்தான் தனது முடிவில் உறுதியாக இருந்தால், ஐசிசி பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது:

வருமான இழப்பு: ஐசிசி-யிடமிருந்து கிடைக்க வேண்டிய சுமார் 35 மில்லியன் டாலர் நிதி நிறுத்தப்படலாம்.

சர்வதேச தனிமைப்படுத்தல்: மற்ற நாடுகளுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

பிஎஸ்எல் (PSL) பாதிப்பு: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்படலாம்.

ஒளிபரப்பு நிறுவனங்களின் வழக்கு: ஒளிபரப்பு ஒப்பந்தங்களை மீறியதற்காக பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு மிகப்பெரிய வர்த்தமாகும்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய வர்த்தகமாகும். இந்தப் போட்டி நடைபெறவில்லை என்றால் கிரிக்கெட் உலகம் மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்திக்கும். தற்போது நிலவும் இந்தத் தர்மசங்கடமான சூழலில், ஐசிசி பாகிஸ்தானைத் தடை செய்யுமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *