Skip to content

பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் என்ன நடக்கும் தெரியுமா..? விஜய்-க்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை!

சென்னை,மார்ச்.16; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரித்தல் போன்ற ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுக்க முயற்சி?

அரசியலுக்குப் புதிதான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. தனித்துப் போட்டி என அறிவித்த போதிலும், ஒத்த கருத்துடையோர் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். இதுபோன்ற சூழலில் தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுக்க பாஜக பெருமுயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தேமுதிகவை இழந்து நிற்கிறது அதிமுக: திருமாவளவன்

இத்தகைய சூழலில் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் கட்சிகளின் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் திமுக கூட்டணியாவது பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது;

ஆனால், பாஜக-அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை – அவர்கள் கூட்டணி அமைப்பதற்கே போராடிக் கொண்டுள்ளனர்-2021ஆம் ஆண்டில் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் சேர்க்கும் முயற்சியில் தேமுதிகவை இழந்து நிற்கின்றனர் என்று கூறினார்.

“பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் தவெக சூனியமாகும்”

தற்போது தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது-அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது-பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்- மற்ற மாநிலங்களில் பாஜக என்ன செய்ததோ அதையே தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறது-நடிகர் விஜய் அதற்கு இணங்க மாட்டார் என்று நம்புவதாக திருமாவளவன் தெரிவித்தார்.

“சிலிண்டர் விவகாரத்தில் அண்ணாமலை அரசியல் செய்கிறார்”

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது-நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும்-உலக நாடுகள் முழுவதிலும் கியாஸ் பதற்ற நிலை இருக்கிறது- இதனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிந்திருக்கவில்லை, அவர் அரசியல் செய்கிறார்- சிலிண்டர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நடத்துவது தேர்தலுக்கான போராட்டம் அல்ல, மக்களுக்கானது என்றும் திருமாவளவன் விளக்கினார்.

தவெகவிற்கு பாஜக நெருக்கடி தரவில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை இணைக்க மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்தி மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையல்ல என்று கூறினார்.

பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை-கூட்டணி அமைப்பதற்கு பாஜகவுக்கு தொண்டர்களின் பலமும், கட்சியின் கொள்கைகளும் போதும் என்று குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *