டெல்லி,ஜன.20; பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக பீகாரைச் சேர்ந்த 45 வயதான நிதின் நபின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் இன்று (20.01.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
நிதின் நபின் போட்டியின்றித் தேர்வு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரைத் தேரந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் நிதின் நபின் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கையெழுத்திட்ட 37 செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே. லக்ஷ்மன் அறிவித்தார்.
இளம் தலைமை மற்றும் அரசியல் பின்னணி
பாஜக வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (45 வயது) தேசியத் தலைவராகும் பெருமையை நிதின் நபின் பெற்றுள்ளார். இவர் பீகார் மாநிலத்திலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவும் பாஜகவில் இருந்தவர். 2006-ல் தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்த நிதின் நபின், அன்று முதல் தோல்வியையே சந்திக்காத ஒரு வெற்றிகரமான தலைவராகத் திகழ்கிறார்.
தலைமுறை மாற்றம் (Generational Shift)
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு நிதின் நபின் வருகிறார். கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஒரு தசாப்தத்திற்கு கட்சியை வழிநடத்த இளம் இரத்தத்தைப் பாய்ச்சு நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் கட்சியின் தேர்தல் வெற்றிகளுக்கு நிதின் நபின் ஆற்றிய பங்களிப்பு அவருக்கு இந்த உயர் பதவியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பாஜகவின் உள்கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவார்
நிதின் நபினின் இந்தப் புதிய பொறுப்பு, பாஜகவின் உள்கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலோடு, இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இவரது முதன்மை இலக்காக இருக்கும்.
