சென்னை,மார்ச்.28; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பல சுவாரசியமான திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர். சி தேர்தல் களத்தில் குதிக்க உள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி
சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுபோன்ற சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசினார்.
அதிமுக மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி!
இம்முறை, அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் இன்னொரு தொகுதியும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இதுவரை தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
பிடிஆருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள சுந்தர் சி!
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்பார்.
பாரதிய ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டவுடன், நாளை மறுதினம் (மார்ச் 30, 2026) இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்.
திமுக சார்பில் பிடிஆர் நிற்பார் என உறுதியான தகவல்
மதுரை மத்திய தொகுதியில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
திமுக போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர் பட்டியலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் போட்டியிடுவது உறுதி என்று திமுகவினர் பேசுகின்றனர்.
பிடிஆருக்கு எதிராக திமுகவில் உள்குத்து?
அதேவேளையில், பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கு எதிராக உள்கட்சியிலேயே ஒரு அணி செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் உள்ளடி வேலையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எனினும், பிடிஆருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருப்பதால் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
பிடிஆரின் வெற்றியை உறுதிசெய்ய முக்கிய நபர் அறிவுறுத்தல்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக இருப்பவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அழைத்துப் பேசி, பிடிஆருக்கு எதிரான போக்கை கைவிட்டு, அவரது வெற்றியை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் பேச்சு உண்டு.
இதுபோன்ற சூழலில், பிடிஆருக்கு எதிராக சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிடிஆருக்கு எதிராக சுந்தர் சி; சரியான வியூகமா?
செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக திரைப்பிரபலம் சுந்தர் சி களமிறக்கப்பட்டிருப்பது சரியான வியூகமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
