தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, களப்பணிகளை ஒருங்கிணைக்கவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் அனுபவம் வாய்ந்த மத்திய அமைச்சர்களை அக்கட்சியின் தேசிய தலைமை நியமித்துள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர்களை நியமித்து அக்கட்சியின் மேலிடம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசியலை நன்கு அறிந்தவாரா கோயல்?
தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தமிழக அரசியலை நன்கு அறிந்தவர் என்பதோடு, கடந்த காலங்களில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றியவர். நிர்வாகத் திறமை மற்றும் தேர்தல் மேலாண்மையில் இவருக்கு இருக்கும் அனுபவம் தமிழகத்தில் கட்சிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணை பொறுப்பாளர்கள் நியமனம்
பியூஷ் கோயலுக்கு உதவியாக மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ரம் மெக்வால், மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகல் உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது, கூட்டணி குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வது மற்றும் தேர்தல் பரப்புரைகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
தாமரையை மலரச் செய்வதே நியமனத்தின் முக்கியத்துவம்
மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதன் மூலம், தமிழக தேர்தல் பணிகளை டெல்லி மேலிடம் நேரடியாக கண்காணிப்பதை உறுதி செய்கிறது. பியூஷ் கோயல் போன்ற மூத்த தலைவர்கள் மூலம் பலமான கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது
வடமாநிலங்களில் தேர்தல் பணிகளில் அனுபவம் பெற்ற அர்ஜூன்ராம் மெக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோர் தமிழக நிர்வாகிகளுடன் இணைந்து பூத் அளவிலான பணிகளை முடுக்கி விடுவார்கள்.
“தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதே இலக்கு” என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்த மூவர் குழு, தமிழக அரசியல் சூழலில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
,
