Skip to content

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; நாளைக்குள் கூட்டணியை இறுதிசெய்ய பாஜக தீவிரம்! அமமுகவைத் தொடர்ந்து யார்…?

சென்னை, ஜன.21; தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மற்றும் கூட்டணியை இறுதி செய்யும் பேச்சுவார்த்தைகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்

பிரதமர் மோடி நாளை மறுதினம் (23.01.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். அன்று மாலை சென்னையை அடுத்த மதுரந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக-வின் அதிகாரப்பூர்வ தேர்தல் முழக்கமாக இந்த கூட்டம் அமையும் எனக் கூறப்படுகிறது.

நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிரம்

பிரதமர் பங்கேற்கும் மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் முன்னிலைப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, இன்னும் இறுதி செய்யப்படாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடிக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

பியூஷ் கோயல் வருகை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்றிரவு (21.01.2026) சென்னை வருகிறார்.

உறுதியான கட்சிகள்: ஏற்கனவே அதிமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

அமமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவதாக இன்று அறிவித்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது இறுதி செய்யப்படவில்லை என்றபோதிலும், அக்கட்சித் தலைவர்களையும் மோடியின் பொதுக்கூட்ட மேடையில் இடம்பெறச் செய்வதன் மூலம் ஒரு வலிமையான மாற்றுக் கூட்டணியைக் காட்ட பா.ஜ.க. முயல்கிறது.

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக; மூத்த தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *