Skip to content

புதுச்சேரியில் பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு? – தொகுதி பங்கீட்டு பேச்சை புறக்கணித்த ரங்கசாமி! காரணம் என்ன?

புதுச்சேரி,மார்ச்.17; புதுச்சேரியில் பாஜக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 16, திங்கள்) தொடங்கிவிட்டது.

என்ஆர்காங்கிரஸ்-க்கு 16, இதரகட்சிகளுக்கு 14 தொகுதிகள்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி பிரித்துக்கொள்ள உள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்திருந்தார்.

லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க ரங்கசாமி எதிர்ப்பு

இதில் பாமக-வுக்கு இடம் ஒதுக்காததால் அந்தக்கட்சி 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார்.

பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் ரங்கசாமி மோதல்

இச்சூழலில் நேற்று இரவு (மார்ச் 16,திங்கள்) மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச்செயலர் ஜெயபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். ஆனால், முதலமைச்சர் ரங்கசாமி மன்சுக் மாண்டவியாவை சந்திக்கவில்லை.

பாஜக தரப்பினர் காத்திருந்தனர்; என். ரங்கசாமி வரவில்லை!

தொடர்ந்து அமைச்சர், கொறடா தரப்பில், தங்கள் தலைவரின் லட்சிய ஜனநாயக கட்சி எதிர்ப்பை தெரியப்படுத்தினர். காரசாரமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று காலை மீண்டும் பேசலாம் என்று முடிவு செய்து புறப்பட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் தரப்பிலோ லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்த்தால் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று தெரியப்படுத்தியுள்ளனர்.

என்.ஆர் காங்கிரஸ்-பாஜக உறவு முறிகிறதா?

இச்சூழலில் இன்று காலை 9 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பின் வருகைக்காக பாஜகவினர் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் ஆகியும் வராததால் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

தொகுதியில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் அடங்கிய பட்டியலை மேலிடத்துக்கு தந்து தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் பாஜக – என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி முறியக்கூடும் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அல்லது என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணிக்காக லட்சிய ஜனநாயகக் கட்சி காவு கொடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *