புதுச்சேரி, ஏப்.01; 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்துக்கு வரும் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரி அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 5ஆம் தேதி புதுச்சேரியில் 22 இடங்களில் சாலை வலம் (Road show) மற்றும் பரப்புரை நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அக்கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
22 இடங்களில் அனுமதி மறுப்பு-8 இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்
ஆனால், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, 22 இடங்களில் பரப்புரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்குப் பதிலாக, பாதுகாப்பான மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத 8 இடங்களை மட்டும் தேர்வு செய்யுமாறு தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறை முடிவு – தவெக தொண்டர்கள் அதிருப்தி
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இருப்பினும், விஜய்யின் பரப்புரைக்காக மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணியில் புதுச்சேரி தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி கட்டுப்பாடுகளால் பரப்புரையின் வேகம் குறையுமா?
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் ஒவ்வொரு அடியும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் பரப்புரையின் வேகத்தைக் குறைக்குமா அல்லது ஆதரவை அதிகரிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தவெக பரப்புரை பாடலை வெளியிட்ட விஜய்!
இதனிடையே,, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெகவின் பரப்புரைப் பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
“உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா?” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் ‘மெரள போகுது ஸ்டேட்டு, எங்க விசிலு சத்தம் கேட்டு; நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு’ என்பன போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
