மதுரை, ஜன.29; மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற வீர வணக்க நாள் கூட்டத்தில் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியினரை வசைபாடி சில கருத்துகளை பேசினார்.
பூத் கமிட்டிக்கு கூட போட ஆள் இல்லாத கட்சி, தொகுதிக்கு 2 ஆயிரம், 3, ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் கட்சி, என்று காங்கிரஸை கடுமையாகச் சாடினார். மேலும், காங்கிரஸ் எம்பி-க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என அக்கட்சியின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரசை விமர்சித்ததால் வசைக்கு ஆளான கோ.தளபதி
யதார்த்தமாக தனது பாணியில் தளபதி பேசியபோதிலும், இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து திமுகவை குறிவைத்து பதிலடி கொடுத்து வந்தனர்.
அதேவேளையில், கோ.தளபதிக்கு திமுக தரப்பில் இருந்து பலரும் ஆதரவு குரல் கொடுத்தனர். தளபதி சரியான கருத்தை தைரியமாக பேசினார் என்றும் திமுகவினர் பேசினர்.
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி என சுவரொட்டி
தளபதிக்கு 2 காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்துவேன், என்று மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இதனை பறைசாற்றும் வகையில், மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அத்தனை அறிவுறுத்தல்களை வழங்கியும், திமுகவுடன் காங்கிரஸ் கட்சி மோதல் போக்கை கடைப்பிடிப்பதை நிறுத்தவில்லை.
மோதல் அதிகமானதால் திமுகவுக்கு தலைமை வாய்ப்பூட்டு
திமுக- காங்கிரஸ் இடையிலான மோதல் விவாதப்பொருளான நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி கட்சியினர் மீதான கருத்துகளை பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்குமாறு திமுக தலைமை கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில், தளபதியின் மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப்பெற காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எப்படியாவது மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்ற துடிப்பு
மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் காங்கிரஸின் விருப்பத் தொகுதிகளாக உள்ளன. ஒன்று மதுரை மத்திய தொகுதி, மற்றொன்று மதுரை வடக்கு. இதில் மத்திய தொகுதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வசம் உள்ளதால், அத்தொகுதியை பெற முடியாது என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்துள்ளனர்.
இதனால் அவர்களது குறி தளபதியின் வடக்கு தொகுதி மீது விழுந்துள்ளது.
தொகுதியில் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட தளபதி
இதனிடையே, கோ.தளபதி வடக்கு தொகுதியில் களம்காண அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்.
பம்பரமாக சுழன்று தொகுதி முழுவதிலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து வருகிறார். இப்படியாக தொகுதியை தயார்படுத்தி வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தளபதியை பழிவாங்க அவரது தொகுதியை பறிக்க தீவிரம்
காங்கிரஸை தளபதி விமர்சித்ததற்கு பழிவாங்கவே அவரது தொகுதியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டே செயல்படுகிறதா என்ற சந்தேகம் திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.
ஏற்கனவே மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே வெடித்துள்ள மோதலுக்கு தீர்வுகாணப்படாத நிலையில், அக்கட்சி குறித்து விமர்சனம் செய்ய முடியாமல் திமுகவினர் தவித்து வந்தனர்.
வெளியே சொல்ல முடியாமல் புழுங்கும் திமுகவினர்
தற்போது காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதால், திமுகவினர் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டணியில் இருப்பதனாலேயே இவர்களின் அனைத்து வசைகளையும் சகித்துக் கொள்ள வேண்டுமா? என்று மதுரை மாவட்ட திமுகவினர் மனம் வெதும்புகின்றனர்.
காங்கிரசுக்கு மதுரை வடக்கு கிடைத்தாலும் யார் வேலை செய்வர்?
சரி, ஒருவேளை மேலிடத் தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து மதுரை வடக்கு தொகுதியை பெற்றுவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் திமுகவினர் எப்படி தேர்தல் பணியாற்றுவார்கள் என யோசிக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகின்றனர், உடன்பிறப்புகள். கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தான் படுகிறது.