Skip to content

பெரம்பலூர் நாதக வேட்பாளர் திடீர் மாற்றம்! திமுக வென்றால் மகிழ்ச்சி எனக் கூறினாரா? கட்சி வட்டாரத்தில் சலசலப்பு!

பெரம்பலூர்,ஏப்.03; பெரம்பலூர் (தனி) தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சிராணி திடீரென மாற்றப்பட்டது, அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் பெண் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்தால் சந்தோசம் தான் என்று அவர் கூறியதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜான்சிராணி வேட்பாளர் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாதகவின் வேட்பாளராக ஏற்கனவே அக்கட்சியின் மாநில மகளிர் பாசறையின் துணைச் செயலாளர் ஜான்சிராணி சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் தொகுதியில் தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் ஜான்சிராணி கடந்த 30ஆம் தேதி தனது வேட்புமனுவை கட்சியினருடன் வந்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

திடீரென ஜான்சிராணி மாற்றம்; சுகன்யா என்பவர் புது வேட்பாளர்

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 2, வியாழன்) திடீரென ஜான்சிராணி மாற்றப்பட்டு, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் சுகன்யா (37) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுகன்யா தனது வேட்புமனுவை நேற்று மாலை3 மணிக்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். பின்னர் அவர் தேர்தல் பரப்புரைக்குச் சென்றுவிட்டார்.

திமுக பெண் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜான்சிராணி பேசினாரா?

திமுக பெண் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்தால் சந்தோசம் தான் என்று ஜான்சிராணி கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக ஜான்சிராணி மாற்றப்பட்டு பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு புதிய வேட்பாளராக சுகன்யா அறிவிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *