Skip to content

பெரிய வியாழன் தினத்தில் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி மனு தாக்கல்!

திருச்சி,ஏப்.02; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளன்றே, தங்களது மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று பெரிய வியாழன்; திருச்சி கிழக்கில் விஜய் மனுதாக்கல்

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், அவற்றில் ஒன்றான பெரம்பூரில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 2, வியாழன்) தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார்.

வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் திரண்டு வரவேற்பு!

பின்னர் தனி வேனில் பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்திற்கு சென்றார். செல்லும் வழிநெடுகிலும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் தனது ரசிகர்களைப் பார்த்து விஜய் கையசைத்தபடியே
சென்றார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு விஜய் சென்றபோது, சுயேச்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார். இதனால் சிறிது நேரம் வேனிலேயே காத்திருந்துவிட்டு, பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.ப.கிருஷ்ணன் மகன்

விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய்யின் வருகையை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி வேட்புமனு தாக்கல்

இதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து 2ஆவது முறையாகப் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இன்று (ஏப்ரல் 2, வியாழன்) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்த உதயநிதியை திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டுவந்து வரவேற்பளித்தனர். தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்களின் பேராதரவுடன் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

5 ஆண்டுகால சாதனைகளும் தேர்தல் வாக்குறுதிகளும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில்
மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

உள்கட்டமைப்பு வசதிகள்: சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.

கல்வி மற்றும் சுகாதாரம்: அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு.

மக்களுடன் நேரடித் தொடர்பு: தொகுதியில் உள்ள குறைகளைக் களைய முன்னெடுக்கப்பட்ட ‘நேரில் சென்று கேட்டறியும்’ திட்டங்கள்.

தேர்தல் களம் மற்றும் எதிரணிகள்

இம்முறை சேப்பாக்கம் தொகுதியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆளுங்கட்சியின் சாதனைகள் மற்றும் இளைஞர்களிடையே தமக்குள்ள செல்வாக்கு ஆகியவை தமக்கு சாதகமாக இருக்கும் என உதயநிதி நம்புகிறார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இந்த மனுத் தாக்கலின் போது உடனிருந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *