சென்னை, டிச.25; பொங்கல் திருநாளுக்குப் பின்னர் அதிமுகவிலிருந்து மேலும் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
“பொங்கலுக்குப் பின்னர் அரசியலில் திருப்புமுனை”
அப்போது அவர், “வரவிருக்கும் தைத்திங்கள் திருநாளுக்குப் பின்னர், அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கின்றனர்” எனக் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், விரைவில் அவர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமமுகவுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை
டி.டி.வி தினகரன் தலைமையிலான அமமுக கட்சியும் தவெக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தனது மலேசியப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் ஆட்சிப் பீடத்தில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
