சென்னை,ஜன.06; தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே, 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 8-ம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தைப்பொங்கல் திருநாளைத் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைச் சென்னையில் உள்ள ரேஷன் கடையில் வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விநியோகம் நடைபெறும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளவை
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பின்வரும் பொருட்கள் வழங்கப்பட உள்ளன:
பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ. முழு கரும்பு 1, ரொக்கம் ரூ.3,000
மேலும், தகுதியுள்ள நபர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் இந்தத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு சுமார் ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஏற்கனவை அரசாணை வெளியிட்டுள்ளது.
ரூ.3,000 ரொக்கப் பணம் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்
கடந்த ஆண்டுகளில் ரூ.1,000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் தேவையை முன்னிட்டும் இந்த ஆண்டு ரொக்கப் பரிசு ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டோக்கன் விநியோகம் மற்றும் கூட்ட நெரிசல் தவிர்ப்பு
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றிப் பொங்கல் பரிசைப் பெறுவதற்கு வசதியாக, ரேஷன் கடைகள் மூலம் முன்கூட்டியே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வீட்டிற்கு வரும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சென்று பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஏழை, எளிய மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். நாளை மறுதினம் (08.01.2026) தொடங்கும் இந்த விநியோகம், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்துப் பயனாளிகளுக்கும் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது.
