சென்னை,பிப்.27; தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தவெக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், விஜய் தற்போது தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக நீண்டகாலமாக செய்திகள் உலா வருகின்றன.
விஜய்யின் மனைவி சங்கீதா மனு; ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணை
இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை ஏற்ற செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது.
கடந்த 24ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கீதாவை காதலித்து கரம் பிடித்தார் நடிகர் விஜய்
இலங்கையைச் சேர்ந்த சங்கீதா விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை லண்டன் தொழிலதிபர் ஆவார். விஜய்-சங்கீதா நிச்சயதார்த்தம் லண்டனில் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் 1999ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சூழலில், அவரது மனைவி சங்கீதா மணவிலக்கு கோரி தாக்கல் செய்திருக்கும் மனு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்-சங்கீதா ஜோடி கோலிவுட்டின் சிறந்த தம்பதியாக பார்க்கப்படுபவர்கள்!
விஜய் மற்றும் சங்கீதா ஜோடி கோலிவுட்டின் மிகச்சிறந்த தம்பதியாக பார்க்கப்படுபவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால், இத்தகைய செய்திகள் அவரது அரசியல் பயணத்தை பாதிக்குமோ என்ற கவலையில் அவரது தொண்டர்கள் உள்ளனர்.
