சென்னை,ஏப்.01; சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் அதிமுக சார்பில் ஒரு தொகுதியும் பாஜக சார்பில் ஒரு தொகுதியும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அதிமுக சாா்பில் மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக புதிய நீதிக்கட்சி சார்பில் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி நிறுத்தப்பட்டுள்ளார்.
மதுரை மக்கள் வெற்றிக்கனியை தருவார்கள்: சுந்தர்.சி
இதுபோன்ற சூழலில், சென்னையில் இன்று (ஏப்ரல் 1,புதன்) செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதி மக்கள் நிச்சயம் எனக்கு வெற்றிக்கனியை தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது; இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் எனது வாழ்க்கை மதுரையில்தான் இருக்கும் என்பதை உறுதிப்பட சொல்கிறேன் என்று குறிப்பிட்டார்.
விஜய் என் மீது மதிப்பு கொண்டவர்: சுந்தர்.சி
திரைப்படத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக நிறைய சாதனையை படைத்திருக்கிறேன்; எனது அடுத்த கட்ட நகர்வு என்பது தேர்தல் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்படும்; நடிகர் விஜய் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அதேபோல நானும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
விஜய்யை நான் விமர்சிக்கத் தயாராக இல்லை: சுந்தர்.சி
எனது மனைவி குஷ்பு, அவரை (விஜய்) தம்பியாக தான் கருதுகிறார். அவரும் குஷ்புவை அக்காவாக தான் பார்க்கிறார். அதனால் எந்த வகையிலும் அவரைப் பற்றி, அவரது கட்சியைப் பற்றி பேசவோ, விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரை இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி என்று சுந்தர் சி கூறினார்.
