மதுரை,மார்ச்.11; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் ஒரு சுவாரசியமான அரசியல் நகர்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எப்போதும் “வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப்பொருட்களோ தரமாட்டேன்” என்று கூறிவந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது தனது தொகுதியில் குடும்பத்திற்கு ஒரு பிளாஸ்டிக் நாற்காலி வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் பரிசுப் பொருட்கள்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் சீட் உறுதியான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் ஹாட் பாக்ஸ், குடம், சேலை போன்ற பொருட்கள் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
பிடிஆர்-இன் கொள்கை மாற்றமும் ஆச்சரியமும்
மதுரை மத்திய தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏ-வாக தேர்வான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுவரை மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து மாறுபட்டுத் தனித்துவமான அரசியல் செய்து வந்தார். “நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திப்பேன், பரிசுப் பொருட்கள் தரமாட்டேன்” என்று பலமுறை மேடைகளில் பெருமையாக பேசியிருக்கிறார்.
ஆனால், தற்போது அவரும் மற்ற அரசியல்வாதிகளைப் போலவே குடும்ப அட்டைக்கு ஒரு பிளாஸ்டிக் நாற்காலி வழங்கத் தொடங்கியிருப்பது அவரது தொகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயல்பாட்டு அறிக்கையுடன் நாற்காலி விநியோகம்
அமைச்சர் பிடிஆர் 6 மாதத்திற்கு ஒருமுறை தனது தொகுதியில் செய்த பணிகளை ‘செயல்பாட்டு அறிக்கையாக’ (Report Card) வீடு வீடாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இந்த அறிக்கையை வழங்கச் செல்லும் அவரது ஆதரவாளர்கள், அதனுடன் அமைச்சரின் அன்பளிப்பாக ஒரு நாற்காலியையும் வழங்கி வருகின்றனர்.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு
அமைச்சரின் இந்தத் திடீர் மனமாற்றம் தொகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. “பரிசுப் பொருட்களே தரமாட்டேன்” என்று சொன்னவரே நாற்காலி வழங்கத் தொடங்கிவிட்டதால், தேர்தலுக்கு முன்னதாக அடுத்தடுத்து வேறு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
பிடிஆரின் ‘நாற்காலி அரசியல்’ மக்களால் ரசிக்கப்படுமா?
அரசியலில் கொள்கைகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாறுவது இயல்பு என்றாலும், அமைச்சர் பிடிஆர் போன்ற ஒரு மூத்த மற்றும் படித்த அரசியல்வாதியின் இந்த மாற்றம் விவாதப் பொருளாகியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் இந்த ‘நாற்காலி அரசியல்’ அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
