டெல்லி,பிப்.02; மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
மோடி அரசிடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன: கார்கே
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கார்கே,பிரதமர் மோடியின் மத்திய அரசிடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. பட்ஜெட் 2026-27 இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை. ஏழை மக்களுக்காக பட்ஜெட்டில் எதுவுமே செய்யப்படவில்லை என்று கார்கே விமர்சித்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் மந்தமான நிதிநிலை அறிக்கையாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவுமே இல்லை: ப.சிதம்பரம்
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், “வேலை வாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாட்டின் முன் எழுந்துள்ள பல சவால்களை மத்திய நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை. ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் செலவினம் குறைந்துள்ளது; மத்திய அரசின் மூலதனச் செலவு குறைந்துள்ளது; ஜல்ஜீவன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது; வேலை வாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் மந்தமானது என்றே சொல்லலாம்: சிதம்பரம்
நிதிப்பற்றாக்குறை சொற்ப அளவாக 0.1 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வியூகப்படி பார்த்தால் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு சற்றும் ஈடுகொடுக்காத மந்தமான பட்ஜெட்டாக இருக்கிறது. இதை மந்தமான பட்ஜெட் என்றே சொல்லலாம் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
“வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைவது பற்றி எதுவுமே சொல்லவில்லை”
நாட்டின் உண்மையான நெருக்கடி விஷயங்களுக்கு பட்ஜெட்டில் எந்தப் பதிலும் இல்லை. வேலையில்லாத இளைஞர்கள், உற்பத்தி வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுதல், வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைதல், துயரத்தில் இருக்கும் விவசாயிகள் உள்ளிட்ட நாட்டின் உண்மையான சவால்களை மத்திய அரசு கவனிக்கவில்லை என்று சிதம்பரம் தெரிவித்தார்.
மாநில வளர்ச்சிகளுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை: சசிதரூர்
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறும்போது, “நாட்டில் தலைவிரித்தாடி வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை குறித்து பட்ஜெட்டில் எந்தவித பதிலும் இல்லை. நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை. மேலும் மாநில வளர்ச்சிகளுக்காக பட்ஜெட்டில் ஒன்றுமே செய்யப்படவில்லை” என்று குறை கூறினார்.
