டெல்லி,ஜன.10; இந்தியாவின் மிக முக்கியமான நிதி நிகழ்வான மத்திய பட்ஜெட் (Union Budget 2026) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. இது ஏப்ரல் 2ஆம் தேதி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. முதல் அமர்வு பிப்ரவரி 13 வரை நடைபெறும், பின்னர் ஒரு இடைவேளைக்குப் பிறகு மார்ச் 9 முதல் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் தொடங்கும்.
பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தனது 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பொதுவாக வார நாட்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு விடுமுறை நாளன்று தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 1999-ஆம் ஆண்டு யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமையன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic Survey)
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஜனவரி 29ஆம் தேதி நாட்டின் பொருளாதார நிலை குறித்த ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இது நாட்டின் ஜிடிபி (GDP) வளர்ச்சி மற்றும் கடந்த ஓராண்டு கால நிதி நிலவரங்களை விளக்கும் முக்கிய ஆவணமாகும்.
நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள்
கடந்த பட்ஜெட்டில் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் வரி சலுகைகள் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக வரிவிலக்கு வரம்பு அதிகரிப்பு மற்றும் வீட்டுக் கடன் வட்டி குறைப்பு போன்ற அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இந்த பட்ஜெட், சாதாரண மக்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
