Skip to content

“மம்தா பானர்ஜி எனது தங்கை போன்றவர்; அவர் என் மீது கோபமாக இருக்கலாம்” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உருக்கம்!

கொல்கத்தா,மார்ச்.08; மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிலிகுரி அருகே நடைபெற்ற சர்வதேச சந்தாலி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் தன்னை வரவேற்க வராதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மம்தா பானர்ஜி குறித்து குடியரசுத் தலைவர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நானும் வங்காளத்தின் மகள் தான்; ஆனால் எனக்கு ஏன் இங்கு வர அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை; மம்தா பானர்ஜி எனது சகோதரி போன்றவர், எனது தங்கை போன்றவர்; ஒருவேளை அவர் என் மீது ஏதோ ஒரு காரணத்திற்காகக் கோபமாக இருக்கலாம்; ஆனாலும் அவர் நலமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பொதுவாகக் குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது அம்மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பது மரபு. ஆனால், இந்தப் பயணத்தின்போது மம்தா பானர்ஜியோ அல்லது இதர அமைச்சர்களோ தன்னைச் சந்திக்க வராதது குறித்து முர்மு கவலை தெரிவித்தார்.

நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்ட சர்ச்சை

முதலில் பிதான்நகரில் நடைபெறவிருந்த இந்தச் சர்வதேச சந்தாலி மாநாடு, கடைசி நேரத்தில் கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது. இது குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், “பிதான்நகர் மைதானம் மிகப்பெரியது, அங்கு 5 லட்சம் பேர் வரை கூடியிருக்க முடியும்; ஆனால் நிர்வாகக் காரணங்களைக் கூறி இந்தத் தொலைதூர இடத்திற்கு நிகழ்ச்சியை மாற்றியுள்ளனர்; சந்தாலி மக்கள் ஒன்றுபடுவதையோ, அவர்கள் முன்னேறுவதையோ யாரோ விரும்பவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என வேதனை தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் விளக்கம்

அதே நேரத்தில், கொல்கத்தாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதற்குப் பதிலளித்துள்ளார். “குடியரசுத் தலைவர் பதவி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; ஆனால் அவர் பாஜகவின் தூண்டுதலின் பேரில் தேர்தல் நேரத்தில் அரசியல் பேச வேண்டாம்; பழங்குடியின மக்களின் நலனுக்காக எங்கள் அரசு எவ்வளவோ செய்துள்ளது” என்று அவர் கூறினார். மேலும், நிர்வாக ரீதியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மம்தா பானர்ஜி-திரௌபதி முர்மு வார்த்தைப் போரால் பரபரப்பு

இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கும், ஒரு மாநில முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி வார்த்தைப்போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில சுயாட்சி மற்றும் மரபுகள் குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *