Skip to content

மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூடு; ஐசிஇ அதிகாரி பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவம் – டிரம்ப் ஆதரவு!

மினியாபோலிஸ்,ஜன.08; அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, ஐசிஇ (Immigration and Customs Enforcement-ICE) அதிகாரி, ஒரு பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

மினியாபோலிஸில் நடந்தது என்ன?

மினியாபோலிஸ் நகரில் சட்டவிரோத குடியேறியவர்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ஐசிஇ ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருந்தான். அப்போது, 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற பெண் தனது எஸ்யுவி வாகனத்தில் வந்தபோது இந்த மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் அந்தப் பெண்ணை வாகனத்தை நிறுத்துமாறு கூறியும், அவர் அதிகாரிகளை நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு அதிகாரி காயமடைந்த நிலையில், மற்றொரு அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்தப் பெண் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு; டொனால்ட் டிரம்பின் எதிர்வினை

இந்தச் சம்பவம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்:

“இந்த வீடியோவைப் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது, ஆனால் அந்தப் பெண் ஒரு ‘தொழில்முறை கிளர்ச்சியாளர்’ (Professional Agitator) போலச் செயல்பட்டார்”.

“அதிகாரியைத் தனது வாகனத்தால் மோதி காயப்படுத்தியதால், ஐசிஇ ஏஜென்ட் தற்காப்புக்காகவே சுட்டுள்ளார்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இடதுசாரி அமைப்புகளே இத்தகைய மோதல்களுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் தலைவர்களின் கண்டனம்

மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஐசிஇ ஏஜென்ட்டுகள் நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்” என்று மேயர் வலியுறுத்தியுள்ளார். இது தற்காப்பு நடவடிக்கை என்ற வாதத்தை அவர் நிராகரித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பொதுமக்களின் போராட்டம்

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மினியாபோலிஸ் வீதிகளில் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். “ஐசிஇ வெளியேறு” என்ற முழக்கங்களுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் 2020-ல் நடந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தின் நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதி கோரி போராட்டம்

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கூட்டாட்சி அமைப்புகளுக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த மோதல், வரும் நாட்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *