Skip to content

முதல் டி20 போட்டி; ஸ்ரேயாஸ் இல்லை! திலக் வர்மாவிற்குப் பதில் விளையாடப்போவது யார்? சூர்யகுமார் அதிரடி அறிவிப்பு

நாக்பூர், ஜன.21; இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய திலக் வர்மாவிற்குப் பதிலாக களமிறங்கப்போகும் வீரர் யார் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக நீடித்து வந்தன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திலக் வர்மாவின் இடத்தைப் பிடிப்பது யார்?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான திலக் வர்மா, வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார், இஷான் கிஷன் தான் 3ஆவது வரிசையில் களமிறங்குவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரேயாஸ்-க்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை?

ஸ்ரேயாஸ் ஒரு திறமையான வீரராக இருந்தாலும், இஷான் கிஷனைத் தேர்ந்தெடுத்ததற்கு சூர்யகுமார் யாதவ் இரண்டு முக்கிய காரணங்களைக் கூறினார்.
டி20 உலகக்கோப்பை திட்டம்: இஷான் கிஷன் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே, உலகக்கோப்பைக்கு முன்னதாக அவருக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்குவது அணியின் கடமை என்று தெரிவித்தார்.

இடது கை பேட்ஸ்மேன்: திலக் வர்மா ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால், அவருக்குப் பொருத்தமான மாற்றாக (Like-for-like replacement) இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷனே இருப்பார் என்று நிர்வாகம் கருதுகிறது.

சூர்யகுமாரின் பேட்டிங் நிலைப்பாடு

தானும் 3ஆவது வரிசையில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார், “நான் எந்த இடத்திலும் விளையாடத் தயாராக இருக்கிறேன்; ஆனால், புள்ளிவிவரங்களின்படி எனக்கு 4ஆவது வரிசையே மிகவும் பொருத்தமாக உள்ளது; இருப்பினும், போட்டியின் சூழலைப் பொறுத்து முடிவுகள் மாற்றப்படும்” என்று சூர்யகுமார் கூறினார்.

சாதனைகளைவிடஅணியின் வெற்றியே முக்கியம்

மேலும் தனது சமீபத்திய ஃபார்ம் குறித்துப் பேசிய அவர், “ரன் எடுக்கவில்லை என்பதற்காக எனது அதிரடியான ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள மாட்டேன்; இது ஒரு குழு விளையாட்டு, தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

டி20 உ.கோ.க்கு முன் வீரர்களின் ஃபார்மை பரிசோதிக்க வாய்ப்பு

இஷான் கிஷனின் வருகை இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் டி20 சீருடையில் இஷான் கிஷன் தனது அதிரடியைக் காட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தத் தொடர் வீரர்களின் ஃபார்மை பரிசோதிக்க ஒரு சிறந்த களமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *