சென்னை,ஏப்.04; சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு (2026- 27) முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி (Third Language) கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி மொழித் திணிப்பு விவகாரம் வெடித்துள்ளது.
சிபிஎஸ்இ-ன் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சற்றும் தொடர்பில்லாத விசயத்தைப் பற்றிப் புகார் கூறுவது வாடிக்கை
‘மத்திய அரசின் நோக்கங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் புகார் கூறுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாடிக்கை; 2026-27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டத்தின் (பகுதி-1) படி, 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவின் தாய்மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது
வழங்கப்படவுள்ள மொழிகளைத் தெளிவுபடுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், பிற இந்தியப் பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தி திணிக்கப்படுவது பற்றிய கேள்வி எங்கே எழுகிறது?
தாய்மொழி அல்லது வீட்டு மொழியை பயிற்றுவிக்க முக்கியத்துவம்
கடந்த ஆண்டு, பள்ளிக்கல்வியின் அடித்தள மற்றும் ஆயத்த நிலைகளின் போது தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது.
சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதையும் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் தனது அமைச்சர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளிடமும் முதலமைச்சர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
