Skip to content

முஸ்தபிசுர் ரஹ்மான் – KKR சர்ச்சை: முகமது கைஃப் அளித்த அதிரடி விளக்கம்! கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவு என்ன?

டெல்லி,ஜன.03; ஐபிஎல் 2026 ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. எனினும், வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

குறிப்பாக, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் இந்த முடிவை எடுத்ததற்காக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

முகமது கைஃப் கூறியது என்ன?

துபாயில் நடைபெற்று வரும் ILT20 தொடரில் வர்ணனையாளராக இருக்கும் முகமது கைஃப், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பின்வருமாறு கூறினார்:

“இந்த விவகாரம் குறித்து எனக்கு முழுமையான தகவல்கள் இல்லை; நான் கடந்த சில வாரங்களாக துபாயில் இருக்கிறேன்; எதையும் அவசரமாக முடிவு செய்ய வேண்டாம்; இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“கிரிக்கெட் வாரியம் மிகவம் பெரிய அமைப்பு; சரியான முடிவை எடுக்கும்”

மேலும் அவர் கூறுகையில், “கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மிகவும் பெரிய அமைப்பு; அவர்களுக்குத் தெரியும் எப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று; இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முடிவை எடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று முகமது கைஃப் தெரிவித்தார்.

கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தற்போதைய நிலைப்பாடு

தற்போதைய நிலவரப்படி, கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இருப்பினும், அரசு மற்றும் வெளியுறவுத் துறையின் ஆலோசனையின் படி, ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக வங்கதேச வீரர்களின் பங்கேற்பு குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட்ரசிகர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வது அவசியம்

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்றாலும், எல்லை தாண்டிய பதற்றங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நாட்டின் நலன் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு செயல்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *