சலமன்கா,ஜன.27; மத்திய மெக்சிகோவில் உள்ள ஒரு பரபரப்பான கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் மெக்சிகோ மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்தில் அரங்கேறிய கொடூரம்
மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சலமன்கா (Salamanca) நகரில், லோமா டி புளோரஸ் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.01.02026) மாலை ஒரு உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி முடிந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தபோது, இரண்டு பிக்கப் டிரக்குகளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தது.
அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும், ஒரு சிறுவனும் அடங்குவர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றக் கும்பல்களின் மோதல் பின்னணி
சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ இந்தச் சம்பவத்தை “வன்முறை அலை” என்று தெரிவித்துள்ளார். குவானாஜுவாடோ மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக மெக்சிகோவின் மிகவும் வன்முறை மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.
இங்குள்ள ‘சாண்டா ரோசா டி லிமா’ (Santa Rosa de Lima) என்ற உள்ளூர் கும்பலுக்கும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (Jalisco New Generation Cartel) என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே நிலவும் எல்லைப் போர் மற்றும் மோதல்களே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் விசாரணை
சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் மெக்சிகோ ராணுவம் விரைந்து வந்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
உலகக் கோப்பை கால்பந்துக்கு தயாராகிவரும் வேளையில் பயங்கரம்
இந்தத் தாக்குதல் தொடர்பாக அதிபர் கிளாடியா ஷீன்பாமிடம் மேயர் உதவி கோரியுள்ளார். மெக்சிகோ உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தத் தயாராகி வரும் வேளையில், விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்தத் தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே மோதல்
மெக்சிகோவில் நிலவி வரும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையேயான போர், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. விளையாட்டு போன்ற பொதுவான இடங்களில் கூட இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
