சென்னை,ஏப்.10; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 2 வாரமே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
பரப்புரை முடிய இன்னும் 10 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10, வெள்ளி) சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்
இன்று காலை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
சாதாரண பயணியைப் போல ரயிலில் ஏறிய முதலமைச்சர், அங்கு பயணம் செய்த பொதுமக்களுடன் இயல்பாகக் கலந்துரையாடினார். அப்போது கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் செல்ஃபி
மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் தங்களைச் சென்றடைந்ததா என்பது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் பயணிகள் பலரும் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். மெட்ரோ வளாகத்திலும் பொதுமக்களின் கோரிக்கைகளை அவர் இன்முகத்துடன் கேட்டறிந்தார்.
தஞ்சையில் இன்று மாலை பொதுக்கூட்டம்
சென்னையில் தனது பரப்புரையை முடித்த கையோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10, வெள்ளி) மாலை தஞ்சாவூருக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெற உள்ள மிகப்பெரிய தேர்தல் பரப்புரைக் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்.
ஒருபுறம் கொளுத்தும் வெயில், மறுபுறம் தகிக்கும் தேர்தல் களம்!
தமிழ்நாட்டில் தேர்தல் காய்ச்சல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த மெட்ரோ ரயில் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எளிய முறையில் மக்களைச் சந்திப்பது வாக்காளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் இறுதிக்கட்ட பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளன.
