Skip to content

மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம்; திட்டம் கடந்துவந்த பாதையை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி!

சென்னை,ஏப்.10; சென்னை மாநகரின் போக்குவரத்து முகவரியையே மாற்றியமைத்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.04.2026) பயணம் மேற்கொண்டார். பயணிகளுடன் உரையாடியபடி பயணித்த அவர், இந்தத் திட்டம் கடந்து வந்த சவாலான பாதையை நினைவுகூர்ந்து சமூக வலைதளப் பதிவில் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவிலிருந்து…

மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்… துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று கொண்டுவந்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

2ஆம் கட்டத் திட்டப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்!

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

மெட்ரோ மூலமாக அதிக தூரத்தை இணைக்கும் நகரமாகும்

விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!

சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்!” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *