சென்னை,மார்ச்.24: மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, பிரதமர் மோடி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (மார்ச் 23,திங்கள்) மேற்காசிய போர் நிலவரம் குறித்துப் பேசினார்.
கொரோனா காலத்தில் ஒன்றுபட்டு நின்றது போன்று எதிர்கொள்ள தயாராகிடுக
அப்போது அவர், இந்த நெருக்கடி 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது; இதனால் ஏற்பட்ட கடினமான உலகளாவிய நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது; எனவே, கொரோனா பெருந்தொற்றின் போது நாடு ஒன்றுபட்டு நின்றதைப் போல தற்போதும் ஒற்றுமையாகவும், எதிர்கொள்ள தயாராகவும் இருக்க வேண்டும்; பொறுமை, நிதானம் மற்றும் விழிப்புணர்வை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தெளிவில்லாத ஒரு உரையை பிரதமர் ஆற்றியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களுக்கு அறிவுரை கூறுவது இருக்கட்டும்; அரசு என்ன செய்யப்போகிறது? என்பதை தெளிவாக கூற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
பிரதமரின் உரைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
பிரதமரின் உரை தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்றுக்கு தயாரானது போல மேற்கு ஆசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார்; தயார்நிலையை மக்களிடம் ஒப்படைக்க முடியாது; எதற்குத் தயாராக வேண்டும் – தலைமைக்கா அல்லது தலைமை இல்லாத நிலைக்கா?, தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
போர்ச்சூழலின் தாக்கம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன்
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, கடந்த 11-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதினேன்; அதில், அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த மார்ச் 12-ம் தேதி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின;
“பொறுப்புள்ள மாநில அரசாக ஆலோசனை மேற்கொண்டோம்”
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல் மார்ச் 14-ம் தேதி பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம், MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை, உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தோம்.
ஓன்றிய அரசு என்ன செய்யப்போகிறது?
அப்போதே, மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? என்று கேட்டேன். அப்போதும் பதில் இல்லை.
மார்ச் 15ம் தேதி, தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுரை கூறுவதா?
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவில் தெரிவித்திருக்கிறார்.
