இஸ்லாமாபாத்,பிப்.17; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மோசின் நக்வியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தனது கருத்தை மாற்றிக்கொண்டு பல்டி அடித்துள்ளது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
சர்ச்சை வெடித்தது எப்படி?
சமீபத்தில் இந்திய செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை “திறமையற்றவர்” மற்றும் “படிக்காதவர்” (Illiterate) என்று மிகக் கடுமையாகச் சாடினார். ஒரு செய்தி நிறுவனத்தை நடத்தத் தெரியாதவரை அதன் தலைவராக்கினால் என்ன ஆகுமோ, அதுதான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நடப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“திறமையற்ற மற்றும் படிக்காத ஒருவருக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்குவது உலகிலேயே மிகப்பெரிய குற்றமாகும்” என்று அக்தர் ஆவேசமாகப் பேசியிருந்தார்.
ஒரே நாளில் மாறிய நிலைப்பாடு (U-Turn)
இந்தக் கருத்து பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தானின் ARY News தொலைக்காட்சியில் தோன்றிய அக்தர், தனது பேச்சை அப்படியே மாற்றிக் கொண்டார்.
அவர் கூறுகையில், “நான் பயன்படுத்திய ‘திறமையற்றவர்’ மற்றும் ‘ஜாஹில்’ (படிக்காதவர்) என்ற வார்த்தைகள் மோசின் நக்வி பாயை (சகோதரரை) குறிப்பவை அல்ல. நான் ஒட்டுமொத்த கிரிக்கெட் நிர்வாக அமைப்பைப் பற்றித்தான் பேசினேன். அந்தத் தொலைக்காட்சி எனது பேச்சைத் திரித்துவிட்டது. உண்மையில் மோசின் நக்வி ஒரு நல்ல மனிதர், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு உதவ நினைக்கிறார்,” எனத் தடுமாற்றத்துடன் விளக்கமளித்தார்.
நிஜமான கோபம் என்ன?
தான் நக்வி மீது கோபமாக இருப்பதற்கு நிர்வாகக் காரணங்கள் அல்ல, மாறாக டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடுதான் காரணம் என்று அக்தர் கூறினார். “இந்தியாவுக்கு எதிரான தொடரை புறக்கணிப்போம் என்று முதலில் கூறிவிட்டு, பிறகு திடீரென அதில் பின்வாங்கியது (U-turn) தான் எனக்கு வருத்தத்தை அளித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி மீது விமர்சனம்
அதே பேட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களையும் அக்தர் விட்டுவைக்கவில்லை:
பாபர் அசாம்: இவர் டி20 வடிவத்திற்கு ஏற்ற வீரர் அல்ல. தொடக்க ஆட்டக்காரராக விளையாடினால் மட்டுமே இவரால் ரன் சேர்க்க முடியும், மிடில் ஆர்டரில் இவர் பயனற்றவர்.
ஷாஹீன் அப்ரிடி: அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இல்லை. 125 கிமீ வேகத்திற்கு மேல் அவரால் பந்துவீச முடியவில்லை.
“இந்திய அணி நம்மை விட 50 ஆண்டுகள் முன்னால் இருக்கிறது. நாம் தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நட்சத்திரங்களாக்கி விட்டோம்,” என்று அக்தர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்திய ஊடகத்தில் ஆவேசமாகப் பேசிவிட்டு, உள்நாட்டு ஊடகத்தில் பயந்துபோய் அக்தர் கொடுத்த இந்த விளக்கம், கிரிக்கெட் ரசிகர்களிடையே “அக்தரின் அந்தர் பல்டி” (Embarrassing U-Turn) என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் குழப்பங்களுக்கு நிர்வாகம் மட்டுமல்ல, முன்னாள் வீரர்களின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான கருத்துகளும் ஒரு காரணம் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
