Skip to content

‘யார் மனதும் புண்படும் வகையில் பேச மாட்டேன்”: மதுரையில் நயினார் நாகேந்திரன் பல்டி பேட்டி!

மதுரை,பிப்.16; தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் காய்ச்சலில் தகித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் திமுக அரசு மீதான விமர்சனங்கள், கூட்டணி விவகாரங்கள் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைமையிலான ஆட்சி அமையும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருப்பதாகவும், அது திமுக ஆட்சிக்கு ஒரு ‘பேரிடியாக’ இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள “நீதி கேட்டு பொதுக்கூட்டம்” மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் நாகேந்திரன் கூறினார்.

பலவீனமடையும் திமுக கூட்டணி?

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்:

காங்கிரஸ் சந்தேகம்: திமுகவுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நிர்வாகத் தோல்வி: ஒரு டிஜிபியை கூட முறையாக நியமிக்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதோடு, லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளன.

பெண்களுக்குப் பாதுகாப்பு: காவல் நிலையங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், சாதி ரீதியான பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளால் பாஜக பலமாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். “எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி மலரும்” என்று அவர் உறுதிபடக் கூறினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற கேள்விக்கு, “மார்ச் 1-ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்” எனப் பதிலளித்தார்.

நடிகர் விஜய் குறித்து கருத்து

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் நயினார் நாகேந்திரன் சில விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யின் கொள்கைகள் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், அவர் பங்கேற்கும் கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நயினார் நாகேந்திரனின் ‘அந்தர் பல்டி’..!!

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் மிக முக்கியமான ஒரு கருத்தை அவர் பதிவு செய்தார்: “தனிப்பட்ட முறையில் நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பாதவன்; இனி வரும் காலங்களிலும் யார் மனதும் புண்படும் வகையில் நான் பேச மாட்டேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதனை தவெக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். இதுபோன்ற சூழலில், தான் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவன் என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *