சென்னை,மார்ச்.17; சென்னையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தவெக போராட்டத்தின் போது பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த்; ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை விடுத்தது;
ரஜினி பற்றிய ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு கண்டனம்
அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதாவது ரஜினிக்கு தைரியம் இல்லை என்கிற ரீதியில் ஆதவ்வின் விமர்சனம் இருந்தது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனாவைக் சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் வசைபாடினர்.
ரஜினி அன்புக்கு பணிபவர், மிரட்டலுக்கு அல்ல: எஸ்.ரகுபதி
இதுபோன்ற சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 17, செவ்வாய்) செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, “ரஜினிகாந்தை யாரும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது; அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிபவர்; மிரட்டலுக்கு அல்ல; இது உங்களுக்கும் தெரியும்; அவர் திமுகவுக்கு நெருங்கிய நண்பர்; எங்களுக்குக்காக 1996-ல் குரல் கொடுத்தவர்; அவரை மிரட்ட வேண்டிய அவசியமே திமுகவுக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.
இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்றும் விமர்சனம்
மேலும், எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை; கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களும் அவரின் பேச்சை கேட்பதில்லை; கூட்டணி அமையாத விரக்தியில் பழனிசாமி ஏதேதோ பேசுகிறார்; கட்சித் தலைவர் (பொதுச் செயலாளர்) பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் செயல்பட்டு வருகிறார்; மக்கள் எடப்பாடியை நம்ப தயாராக இல்லை; பலர் வெளியேறிவிட்டனர்; அதிமுக ஊசலாட்டத்தில் உள்ளது என்றும் ரகுபதி விமர்சித்தார்.
பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி மீது ஏன் திடீர் பாசம்?
அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்த பெண்களையே காட்டிக் கொடுக்கும் வேலை நடந்தது. ஆனால் தற்போது திமுக அரசு மீதுள்ள நம்பிக்கையால், பெண்கள் துணிந்து புகார் கொடுக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பொய்யான புகார்களை கூறிவருகிறார்.
மார்ச் 23-க்குள் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு நிறைவடையும். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கூட்டணி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என அமைச்சர் ரகுபதி கூறினார்.
