Skip to content

ராகுல் காந்தியின் கேள்விகளைக் கண்டு அஞ்சுவது ஏன்? மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை,பிப்.04; ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச முயன்ற ராகுல் காந்தி

அப்போது, 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமி்ழ்நாடு எம்பிக்கள் இருவர் உள்பட 8 பேர் தொடர் முழுவதும் இடைநீக்கம்

இதன் எதிரொலியாக ஏற்பட்ட கடும் கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்கள் இருவர் உள்பட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலின் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு அஞ்சுகிறதா?

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததற்கு கண்டனம்

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்களது இடைநீக்கத்தைத் திரும்பப்பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *