ராமநாதபுரம் தொகுதி (எண் -211 )
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி 1948 தொடங்கி இதுவரை 17 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
அதில், காங்கிரஸ் 3, அதிமுக 6, திமுக 5, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு முறை வென்றுள்ளனர்.
அவர்களில், ராமநாதபுரம் ஜமீன் பரம்பரையின் கடைசி ஜமீன்தாரான ராஜ ராஜேஸ்வர சேதுபதியின் மகன் சண்முக ராஜேஸ்வர சேதுபதி இரு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒரு முறையும் சுயேச்சையாகவும் தேர்வானார்.
இத்தொகுதியில் முக்குலத்தோர், இஸ்லாமியர், மீனவ சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் தவிர தேவேந்திர குல வேளாளர், வல்லம்பர், நாடார், செட்டியார், பிள்ளைமார், யாதவர், தெலுங்கு பேசும் பட்டியலினத்தவர், கிறிஸ்தவர் உள்ளிட்ட பல சமூகத்தினரும் உள்ளனர்.
ஆளுங்கட்சியில் நிறைய பேர் சீட் எதிர்பார்க்கின்றனர்
திமுகவில் தற்போதைய எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். இவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் தவிர, சமீபத்தில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, பவானி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் குணசேகரன், மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் இன்பா ரகு ஆகியோரும் சீட் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவும் சீட் கேட்கிறது!
அதிமுகவில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நகரச் செயலாளர் பால்பாண்டி, ஒன்றியச் செயலாளர் மருதுபாண்டி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் சீட்டுக்காக காய் நகர்த்துகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டால், ஜி.பி.எஸ்.நாகேந்திரன் அல்லது தரணி முருகேசன் போட்டியிடக்கூடும் எனப் பேசப்படுகிறது.
முந்தைய தேர்தலில், காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் 1,12,000 வாக்குகளையும், பாஜகவின் குப்புராம் 61,000 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் க. இளங்கோவன் சுமார் 17,000 வாக்குகளையும் பெற்றனர்.
அன்வர்ராஜாவுக்கு சீட் கொடுத்தால் திமுக சோர்ந்துபோகுமா?
இம்முறை விஜய் கட்சியும் களம் காண்பதால், வாக்குகள் ஓரளவு பிரிய வாய்ப்புள்ளது.
எனினும், இஸ்லாமியர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரின் ஆதரவு பெருமளவு இருப்பது, கட்சியின் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு போன்றவற்றால் திமுகவின் கையே ஓங்கியுள்ளது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவுக்கு சீட் கொடுத்தால், திமுகவினர் சரிவர தேர்தல் பணியாற்ற மாட்டார்கள் என தொகுதிக்குள் பேசப்படுகிறது.
