சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், லண்டனில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்’ (Terrorism Act) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்பெர்க் போராட்டத்தின் பின்னணி என்ன?
லண்டனில் உள்ள ‘ஆஸ்பென் இன்சூரன்ஸ்’ (Aspen Insurance) நிறுவனத்திற்கு வெளியே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான ‘எல்பிட் சிஸ்டம்ஸ்’ (Elbit Systems) நிறுவனத்திற்கு இந்த காப்பீட்டு நிறுவனம் சேவை வழங்குவதாகக் கூறி, ‘பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீனம்’ (Prisoners for Palestine) என்ற குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரேட்டா தன்பெர்க் கைதுக்கான காரணம் என்ன?
22 வயதான கிரேட்டா தன்பெர்க், “நான் பாலஸ்தீன ஆக்ஷன் கைதிகளை ஆதரிக்கிறேன். நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன்” (I support the Palestine Action prisoners. I oppose genocide) என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியிருந்தார்.
பிரிட்டிஷ் அரசால் ‘தடை செய்யப்பட்ட அமைப்பு’ என அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன ஆக்ஷன்’ (Palestine Action) குழுவிற்கு ஆதரவாகப் பதாகை ஏந்தியதால், 2000-ம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக சிட்டி ஆஃப் லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆதரவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன ஆக்ஷன் அமைப்பைச் சேர்ந்த 8 கைதிகள், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த நவம்பர் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் இருவர் 50 நாட்களுக்கும் மேலாக உணவைத் தவிர்த்துள்ளதால், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே கிரேட்டா தன்பெர்க் இந்தப் போராட்டத்தில் இணைந்தார்.
தன்பெர்க் கைதால் ஜனநாயக உரிமைகள் குறி்த்து விவாதங்கள்
சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த கிரேட்டா தன்பெர்க், தற்போது அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்து தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். அமைதியான முறையில் பதாகை ஏந்தியதற்காக ஒருவரை ‘பயங்கரவாதச் சட்டத்தின்’ கீழ் கைது செய்தது, பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்த புதிய விவாதங்களை இங்கிலாந்தில் கிளப்பியுள்ளது.
