டாக்கா,டிச.30; வங்கதேசத்தில் சிறுபான்மையீனருக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகி வருகின்றன. மைமன்சிங் மாவட்டத்தில் திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, தற்போது மற்றொரு இந்து இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைமன்சிங்கில் நடந்த கொடூரச் சம்பவம்
வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள பலுகா உபசிலாவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் 40 வயதான பஜேந்திர பிஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அன்சார் (Ansar) படை உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை (29.12.2025) மாலை, பணியில் இருந்தபோது சக ஊழியர் ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சக ஊழியரால் நடத்தப்பட்ட தாக்குதல்
இந்தக் கொலை தொடர்பாக நோமன் மியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேரில் பார்த்த சாட்சிகளின்படி, இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, எந்தவித வாக்குவாதமும் இன்றி திடீரென நோமன் மியா தனது துப்பாக்கியை பஜேந்திர பிஸ்வாஸின் மீது வைத்துச் சுட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய நோமனை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர்.
திபு சந்திர தாஸ் கொலைக்குப் பிந்தைய பதற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மைமன்சிங்கில் திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தின் வடு மறைவதற்குள் அடுத்தடுத்த தாக்குதல்கள் நடப்பது அந்நாட்டு இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
சிறுபான்மையினரின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சிறுபான்மையினரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் அந்நாட்டு இடைக்கால அரசின் நடவடிக்கைகள் மட்டுமே அங்கு அமைதியை மீட்டெடுக்க உதவும்.
