Skip to content

வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக் கொலை: “இந்துக்களே விழித்தெழுக” – கொதித்தெழுந்த நடிகை காஜல் அகர்வால்!

டெல்லி,டிச.27; வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகை காஜல் அகர்வால் பதிவிட்ட ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மௌனம் உங்களைக் காப்பாற்றாது”; காஜல் அகர்வாலின் ஆவேசப் பதிவு

வங்கதேசத்தின் மைமென்சிங் (Mymensingh) பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை உலுக்கியுள்ளன.

இதற்கு எதிர்வினையாற்றிய நடிகை காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீ வைக்கப்பட்ட ஒரு மனித உடலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்துக்களே விழித்தெழுங்கள்! உங்களது மௌனம் உங்களைக் காப்பாற்றாது” என்ற வாசகத்தை எழுதியுள்ளார். மேலும், “அனைத்துக் கண்களும் வங்கதேச இந்துக்கள் மீதுதான்” என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஜான்வி கபூர் கண்டனம்: “இது மனிதாபிமானமற்ற செயல்”

காஜல் அகர்வாலைத் தொடர்ந்து நடிகை ஜான்வி கபூரும் இந்தச் சம்பவத்தை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது பதிவில், “வங்கதேசத்தில் நடப்பவை காட்டுமிராண்டித்தனமானவை; இது ஒரு படுகொலை; இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு உங்களுக்குக் கோபம் வரவில்லை என்றால், அந்த பாசாங்குத்தனம் தான் நம்மை அழிக்கும்; உலகில் எங்கோ நடக்கும் விஷயங்களுக்காக நாம் அழுகிறோம், ஆனால் நமது சகோதர சகோதரிகள் எரித்துக் கொல்லப்படும்போது மௌனமாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கதேசத்தில் இந்திய இளைஞர் கொலையின் பின்னணி என்ன?

வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், மத நிந்தனை செய்ததாகக் கூறி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *