டாக்கா,ஜன.25; வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 23 வயதான இந்து இளைஞர் ஒருவர் (Garage) கேரேஜிற்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட படுகொலை என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
படுகொலை சம்பவத்தின் பின்னணி
குமிலா என்ற மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த சஞ்சல் சந்திர பௌமிக் என்ற இளைஞர், பல ஆண்டுகளாக ஒரு கேரேஜில் வேலை செய்து வந்தார். அந்த கேரேஜில் வைத்தே அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் சஞ்சல் அந்த கேரேஜிற்குள் இருந்தபோது, மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. தீ விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திட்டமிட்ட படுகொலையா? குடும்பத்தின் கண்ணீர் வாக்குமூலம்
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் இது குறித்துப் பேசுகையில், “இது விபத்து அல்ல, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. குறிப்பிட்ட மத அடையாளத்திற்காக அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள்
கடந்த சில மாதங்களாகவே வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் மற்றும் அமிர்த் மண்டல் போன்ற இந்து இளைஞர்கள் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் உலகளவில் கண்டனங்களைப் பெற்றன. தற்போது நடந்துள்ள இந்த எரிப்புச் சம்பவம், அங்குள்ள சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் ஒரு கவலையளிக்கும் போக்காக மாறியுள்ளன. இந்த 23 வயது இளைஞரின் மரணம் சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
