Skip to content

வங்கதேச தேர்தல் முடிவுகள்; 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது வங்கதேச தேசியவாத கட்சி! பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்!

டாக்கா,பிப்.14; 2024-ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அமோக வெற்றி பெற்றுள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.

தாரிக் ரஹ்மான் தலைமையில் மகத்தான வெற்றி

லண்டனில் 17 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்துவிட்டு கடந்த
டிசம்பர் மாதம் தாயகம் திரும்பிய தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 212 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. தாரிக் ரஹ்மான் தான் போட்டியிட்ட டாக்கா-17 மற்றும் போகுரா-6 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான், வங்காளதேசத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஜமாத்-இ-இஸ்லாமி இரண்டாம் இடம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தல் BNP மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டியாக அமைந்தது. ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களைக் கைப்பற்றி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஷபிகுர் ரஹ்மான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, “நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய மாற்றங்கள் மற்றும் வாக்கெடுப்பு

தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான பொதுவாக்கெடுப்பிலும் (Referendum) 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ‘ஆம்’ என்று வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பிரதமருக்கான பதவிக்காலக் கட்டுப்பாடு மற்றும் நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி வீழ்ந்த பிறகு, தாரிக் ரஹ்மானின் வருகை வங்கதேச அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொருளாதார மீட்பு மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது புதிய அரசின் முன்னுள்ள முக்கிய சவால்களாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *