Skip to content

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு; கணவர் உடலருகே இன்று நல்லடக்கம் – ஜெய்சங்கர் பங்கேற்பு


டாக்கா, டிச.31; மறைந்த வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான பேகம் கலிதா ஜியாவின் உடல், அவரது கணவரின் உடலருகே இன்று (31.12.2025 நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இருமுறை வங்கதேச பிரதமராக பதவி வகித்தவர்

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (டிசம்பர் 30) காலமானார். 80 வயது நிரம்பிய கலிதா ஜியா, கடந்த 1991 – 96 மற்றும் 2001 -2006 என இரு முறை வங்கதேச பிரதமராக பதவி வகித்தவர்.

கணவர் ஜியாஉர் ரஹ்மான் உடல் அருகே நல்லடக்கம்

கலிதா ஜியாவின் உடல், தலைநகர் டாக்காவில் உள்ள அவரது கணவரும், வங்கதேச முன்னாள் அதிபருமான ஜியாஉர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. டாக்காவின் ஷெர்-இ-பங்களா நகரில் அமைந்துள்ள ‘ஜியா உதயான்’ பகுதியில் முழு அரசு மரியாதையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இறுதி ஊர்வலம் மற்றும் பொது அஞ்சலி

புதன்கிழமை மதியம் ‘லுஹர்’ தொழுகைக்குப் பிறகு, வங்கதேச நாடாளுமன்றத்தின் தெற்குபிளாசா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாணிக் மியா அவென்யூவில் இறுதிச்சடங்கு தொழுகை (ஜனாஸா) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிதா ஜியாவின் மறைவை முன்னிட்டு வங்கதேசத்தில் மூன்று நாட்கள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான இன்றைய தினம் பொது விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சார்பில் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பு

கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக அவர் டாக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தனது எக்ஸ் தளப்பக்கத்தில், கலிதா ஜியா உடனான நட்பையும், இந்தியா-வங்கதேச உறவில் அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கலிதா ஜியாவின் அரசியல் பயணம்

வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவரான இவர், அந்நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த இவர், வங்கதேச அரசியலில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தார். ஆயினும், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

கலிதா மறைவால் வங்கதேச அரசியலில் பெரும் வெற்றிடம்

கலிதா ஜியாவின் மறைவு வங்கதேச அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, அவருக்கு இருந்த சர்வதேச செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *