Skip to content

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை!: கமல்ஹாசனின் அதிரடி முடிவால் அதிர்ந்த தொண்டர்கள்

சென்னை,மார்ச்.24; தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் முக்கிய அறிவிப்பு, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று (மார்ச் 24, 2026) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

திமுக கூட்டணிக்கு ஆதரவு

கட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், தமிழ்நாட்டின் நலன் கருதி தற்போதைய ஆளும் கட்சியான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு (Secular Progressive Alliance) தனது முழு ஆதரவை வழங்குவதாக கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார். “நாட்டின் நலனுக்காகவும், மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை!

இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் தனக்கும் ஏற்புடையதாக இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர்களது (திமுக) தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதை தான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்-கடந்த 9 ஆண்டுகளாக எந்தவித ஆதாரமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது-புறக்கணிக்கவும் மாட்டேன் என்று தனது அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த முடிவு?

கடந்த சில வாரங்களாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. எனினும், ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், கமல்ஹாசன் இந்தத் தியாகம் கலந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக (MP) இருக்கும் கமல்ஹாசன், தற்போது கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

தொண்டர்களின் நிலைப்பாடு

கமல்ஹாசனின் இந்தத் திடீர் அறிவிப்பு அவரது கட்சித் தொண்டர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாதபோது, கூட்டணி கட்சிகளுக்காக அவர்கள் முனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மூன்றாம் பாதை’ சரியான திசையில் செல்லவில்லை!

தமிழக அரசியலில் ‘மூன்றாம் பாதை’ எனத் தொடங்கி, தற்போது பெரிய கூட்டணிகளுக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு கமல்ஹாசன் வந்துள்ளார். இது தேர்தலுக்குப் பிந்தைய அவரது அரசியல் நகர்வுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *