Skip to content

வாலு போயி கத்தி வந்தது! டும்..டும்..டும்..டும்! தொகுதிகளை தேர்வு செய்வதிலும் திமுக-காங்கிரஸ் இடையே புதிய சிக்கல்!

சென்னை,மார்ச்.11; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது தொகுதிகள் தேர்வில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத் தேர்தல்களில் காங்கிரஸ் செயல்பாடு

தமிழக அரசியலில் 2006-ம் ஆண்டு முதல் தி.மு.க – காங்கிரஸ்
கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது.

2006: 50 தொகுதிகளில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றி.

2011: 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி.

2016: 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி.

2021: 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த முறை ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளையும், அதிகாரத்தில் பங்கையும் கோரியதால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது.

2026 தேர்தல்: தி.மு.க கொடுத்த ஆஃபர் என்ன?

காங்கிரஸ் கட்சி தரப்பில் 41 தொகுதிகள், 2 மாநிலங்களவை இடங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு எனப் பெரிய பட்டியலே நீட்டப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க தலைமை, கடும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கியது. வேறு வழியின்றி காங்கிரஸும் இதற்குச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தொகுதித் தேர்வில் எழுந்துள்ள புதிய சிக்கல்

எண்ணிக்கை முடிவானாலும், இப்போது எந்தெந்த தொகுதிகள் என்பதில் மோதல் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது தன்னிடம் உள்ள 18 தொகுதிகளையும், மீதமுள்ள 10 இடங்களுக்கு 42 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் திமுக-விடம் வழங்கியுள்ளது.

சிக்கல் எங்கே?

காங்கிரஸ் கேட்டுள்ள பெரும்பாலான தொகுதிகள் தி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள ‘கோட்டை’ போன்ற தொகுதிகள் எனக் கூறப்படுகிறது. “வெற்றி வாய்ப்புள்ள இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்?” என தி.மு.க பிடிவாதம் காட்டுவதால், தொகுதித் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவு இழுபறி!

தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்படும் இந்த தொகுதிப் போர் இயல்பானது என்றாலும், 2026 தேர்தலில் இது களப்பணியைப் பாதிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் இரு கட்சிகளும் சுமுக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *