Skip to content

விஜயகாந்த் வென்ற விருத்தாசலம் தான் விருப்பம்; ஆனால், ‘ஆஃபர்” செய்யப்படும் தொகுதி விருகம்பாக்கம்…! குழப்பத்தில் பிரேமலதா?

சென்னை,மார்ச்.16; தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்முறையாக திமுக கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டு, தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் எம்பியாக தேர்வானார்.

மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள்

எனினும், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இருந்தபோதிலும், தேமுதிகவை காரணமாகக் காண்பித்து, கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கோரி மல்லுக்கட்டுகின்றன.

இதுபோன்ற சூழலில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடச் செய்து, தேர்தல் பரப்புரைக்கு தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பிரேமலதாவின் சொந்தத் தொகுதி விருகம்பாக்கம்

இந்த விருகம்பாக்கம் தொகுதியில், 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவின் பார்த்தசாரதி வெற்றி பெற்றார். மேலும் இது பிரேமலதாவின் சொந்த தொகுதியும் ஆகும்.

ஆனால், பிரேமலதாவோ விஜயகாந்த் 2006ஆம் ஆண்டு தேர்தலில் களம் கண்டு, முதன்முதலில் வென்ற விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவே விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதனை ஒத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

அதிமுகவின் வி.என். ரவியை எதிர்க்க பிரேமலதா சரியான நபர்

விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக தரப்பில் வி.என் ரவி களமிறக்கப்படுவார் எனப் பேசப்படுகிறது. இவரை எதிர்த்துக் களமாட பிரேமலதாவே சரியான ஆள் என்று திமுக தலைமை கருதுகிறது.

இதனால் விருத்தாசலமா அல்லது விருகம்பாக்கமா என முடிவு செய்ய இயலாமல் பிரேமலதா குழப்பத்தில் உள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *