சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி மெல்ல நகரத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் அறிவித்துள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.12.2025) நடைபெற்றது. கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவது, பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. எனினும், கூட்டத்தின் ஹைலைட்டாக அமைந்தது கூட்டணி குறித்த தீர்மானம்தான்.
ஒற்றை நிபந்தனை: ‘விஜய் தான் தலைமை’
தமிழக வெற்றிக்கழகம் வரவிருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும், அதன் அடிப்படை விதி என்ன என்பதை இன்றைய கூட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதில் மிக முக்கியமாக, “விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களுக்கே கூட்டணியில் இடம்” என்ற அதிரடி நிபந்தனை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமையை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம்” என்று அக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
இந்தத் தீர்மானம் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்னவென்றால், தவெக மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி; த.வெ.க. தன்னை வெறும் வாக்கு வங்கியைப் பிரிக்கும் கட்சியாகவோ அல்லது பெரிய திராவிடக் கட்சிகளுக்குத் துணையாகச் செல்லும் ஜூனியர் பார்ட்னராகவோ (Junior Partner) பார்க்கவில்லை; ஆட்சியைப் பிடிப்பதே அவர்களின் முதல் மற்றும் ஒரே இலக்கு என்பதை இது உணர்த்துகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு அந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட அடைத்துவிட்டது என்றே கூறலாம்.
திமுக, அதிமுக முதல்வர் பதவியை விட்டுத்தராது..!
ஏனெனில், திமுகவும், அதிமுகவும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை; மூன்றாவது அணிக்கு அழைப்பு: சிறிய கட்சிகள் அல்லது இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுடனும் அதிருப்தியில் உள்ள கட்சிகள், விஜய்யின் தலைமையை ஏற்று வந்தால் அவர்களை அரவணைக்கத் தயார் என்பதையே இந்தத் தீர்மானம் சூசகமாகத் தெரிவிக்கிறது. தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கொடி அறிமுகம், கொள்கை விளக்கம் என அடுத்தடுத்துத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை மட்டுமே குறியாகக் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
“கூட்டணி என்றால் தவெக கையே ஓங்க வேண்டும்”
“கூட்டணி என்று வந்துவிட்டால், அதில் நம் கை தான் ஓங்கியிருக்க வேண்டும்; முதல்வர் நாற்காலி நமக்குத் தான்” என்பதில் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. ஆரம்பக்கட்டத்திலேயே “முதல்வர் வேட்பாளர் விஜய் தான்” என்று அறிவித்திருப்பது, தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதேசமயம், இது தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்குமா அல்லது பல முனைப் போட்டியை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
