சென்னை,பிப்.16; தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு, தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து தான் பேசிய கருத்திற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து விமர்சித்தார். அப்போது, “அரசியலில் அவருக்கு அனுபவம் போதாது, அவர் முதலில் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும்; குறிப்பாக நடிகை த்ரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்று பேசியிருந்தார். ஒரு பெண்ணையும், சக அரசியல் தலைவரையும் இணைத்து அநாகரிகமாக பேசியதாக சமூக வலைதளங்களில் நயினாருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தன.
அரசியல் தலைவர்களின் கண்டனம்
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூட, “நயினார் நாகேந்திரன் பொதுவாகப் பண்பாகப் பேசக்கூடியவர், அவர் ஏன் இப்படிப் பேசினார் என்று தெரியவில்லை, அது வருத்தமாக உள்ளது” என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்
நாகேந்திரன் அநாகரிகப் பேச்சு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட த்ரிஷா, அவமரியாதையை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது; எந்த அரசியல் கட்சியோடும் எனக்கு தொடர்பு இல்ல; அரசியலில் உயர் பதவியில் இருப்பவரிடம் இருந்து அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை; எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது; பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளை பேசவோ, தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்கவோ வேண்டாம் என்று த்ரிஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தவறுதலாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை: நயினார் விளக்கம்
சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ள நயினார் நாகேந்திரன், “தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு எப்போதும் கிடையாது; பேச்சின் ஓட்டத்தில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன; குறிப்பாக அந்த குறிப்பிட்ட வார்த்தை (த்ரிஷா குறித்த கருத்து) தவறுதலாக வந்துவிட்டது; இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எப்போதும் மதிப்பளிக்கும் தார்மீகப் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும், அரசியலில் நாகரிகமான விமர்சனங்களையே தான் முன்வைப்பேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக்கூடாது என மக்கள் கருத்து
அரசியல் களத்தில் விமர்சனங்கள் என்பது தவிர்க்க முடியாதவை என்றாலும், அவை தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது பெண்களின் கண்ணியத்தையோ பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த வருத்தம் தெரிவிப்பு, தற்போது நிலவி வந்த மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
