Skip to content

விபி-ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்க: தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த அதிரடி கோரிக்கை!

சென்னை,ஜன.19; மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய “விபி-ஜிராம்ஜி” (VB-GRAMG) திட்டத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஏத்தட்டும், ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டமும் புதிய மாற்றமும்

இந்தியாவில் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் (MGNREGA) செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2025 டிசம்பர் 16ஆம் தேதி மத்திய பாஜக அரசு இத்திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘விபி-ஜிராம்ஜி’ (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin) என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் முக்கியப் புகார்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், இப்புதிய திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார்:

நிதிச் சுமை அதிகரிப்பு: பழைய திட்டத்தில் 100% நிதியையும் மத்திய அரசே வழங்கி வந்தது. ஆனால், புதிய விபி-ஜிராம்ஜி திட்டத்தில் மாநில அரசு 40% நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும். இது தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு பறிப்பு: 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என மத்திய அரசு கூறினாலும், நடைமுறையில் தொழிலாளர்களுக்குக் குறைந்த நாட்களே வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

உரிமைகள் பறிப்பு: சட்டபூர்வமாக வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலை என்ற உரிமை, அதிகாரிகளின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.

“தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக”

இத்திட்டம் மாநில சுயாட்சிக்கும், ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்கும் எதிரானது என்பதால், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் போல தமிழ்நாடும் இதற்கு எதிராகச் செயல்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், “விபி-ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” மற்றும் “பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே தொடர வேண்டும்” என வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏறகனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு அரசுக்கு மேலும் சுமை

ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) உள்ளிட்ட விவகாரங்களால் மாநில அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், மத்திய அரசு கொண்டு வரும் இத்தகைய மாற்றங்கள் மாநிலங்களின் உரிமைகளை மேலும் பறிப்பதாக அமையும். ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் இத்திட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *