Skip to content

வேளச்சேரியில் ஆன்லைன் டெலிவரி ஊழியர் கொலை முயற்சி; 3 பேர் கைது! முன்விரோதம் காரணம் என வாக்குமூலம்

சென்னை, ஜன.21; சென்னையின் பரபரப்பான பகுதியான வேளச்சேரியில், ஆன்லைன் டெலிவரி ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

என்ன நடந்தது? – தாக்குதலின் பின்னணி

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பார்த்திபன் (23) என்பவர் ‘Zepto’ ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (18.01.2026) வேளச்சேரி ஏ.எல்.முதலி முதலாவது தெருவில் பார்த்திபன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பார்த்திபனை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்களால் சரமாரியாகத் தாக்கினர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை

பார்த்திபனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த பார்த்திபன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கு இது மேலும் ஒரு உதாரணம் என்றும் அவர்கள் விமர்சனம் செய்தனர்.

தாக்குதல் சம்பவம் -காவல்துறையினர் நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். இதன் அடிப்படையில், விஷ்ணு என்கிற நந்தா, சுந்தர்ராஜ் மற்றும் ஸ்ரீவிஷ்ணு ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பழைய பகை காரணமாக தாக்குதல்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது பார்த்திபனுக்கும் இந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அந்தப் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, பழிவாங்கும் நோக்கில் தற்போது இந்தக் கொலை முயற்சி தாக்குதலை நடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குற்றங்களை தடுக்க போலீசின் ரோந்துப்பணி தேவை

சென்னையில் பொது இடங்களில் நடைபெறும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்துள்ள போதிலும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *